தேவையானவை:
புழுங்கல் அரிசி - ஒரு கப், ராஜ்மா - அரை கப், இஞ்சி - சிறு துண்டு, பாசிப்பருப்பு - ஒரு கப், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், பச்சை வேர்க்கடலை - ஒரு கப், மிளகு - 2 டேபிஸ்பூன், நறுக்கிய வெங்காயம் - ஒரு கிண்ணம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
அரிசியுடன் ராஜ்மா சேர்த்து ஊற வைக்கவும். ஊறியதும், தண்ணீர் வடித்து இஞ்சி, மிளகு சேர்த்து அரைக்கவும். பாசிப்பருப்பு, வேர்க்கடலை, உளுத்தம்பருப்பையும் ஊறவைத்து தனியாக அரைத்து எல்லா மாவையும் சேர்த்துக் கலக்கவும். உப்பு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து கலந்து கல் காய்ந்ததும், மிதமான தீயில் அடை தட்டி, வெந்ததும் எடுக்கவும். மிகவும் சத்து நிறைந்தது இந்த ராஜ்மா அடை.
22. முடக்கத்தான் கீரை அடை
தேவையானவை:
புழுங்கல் அரிசி - ஒரு கப், பச்சரிசி - அரை கப், வெந்தயம் - 2 டேபிள்ஸ்பூன், கொடியாக இருக்கும் முடக்கத்தான் கீரை - ஒரு கைப்பிடி, இஞ்சி - சிறு துண்டு, பெருங்காயத்தூள் - சிறிது, பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
புழுங்கல் அரிசி, பச்சரிசி பாசிப்பருப்பு, வெந்தயம் எல்லாவற்றையும் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி இஞ்சி சேர்த்து அரைக்கவும். சிறிது மசியும்போது முடக்கத்தான் கீரையை ஆய்ந்து நறுக்கி மாவுடன் சேர்த்து அரைக்கவும். எல்லா மாவையும் சேர்த்து கலந்து உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கலக்கவும். கல் காய்ந்ததும் மிதமான தீயில் அடையை வார்த்து இருபுறமும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.
23. கேழ்வரகு அடை
தேவையானவை:
கேழ்வரகு, புழுங்கல் அரிசி - தலா ஒரு கப், பொடியாக நறுக்கிய இஞ்சி - சிறிதளவு, மிளகு - 2 டேபிள்ஸ்பூன் (ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும்), தேங்காய் - 2 துண்டுகள் (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), காய்ந்த மிளகாய் - 4, புதினா - ஒரு கைப்பிடி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
கேழ்வரகை கல் நீக்கி அரிசியுடன் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிடவும். பிறகு களைந்து காய்ந்த மிளகாய் சேர்த்து அடைமாவு பதத்தில் அரைக்கவும். இதில் தேங்காய் துண்டுகள், இஞ்சி, மிளகு சேர்க்கவும். புதினாவை பொடியாக நறுக்கி எண்ணெயில் வதக்கிப் போடவும். தேவையான உப்பு சேர்த்து கலந்து அடை தட்டி, இருபுறமும் எண்ணெய் விட்டு வெந்ததும் எடுக்கவும். உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்ற அடை.
24. சாபுதானா அடை
தேவையானவை:
புழுங்கல் அரிசி - ஒரு கப், நைலான் ஜவ்வரிசி - அரை கப், காரட் துருவல் - ஒரு கப், குடமிளகாய் - 1, பாசிப்பருப்பு, துவரம் பருப்பு - தலா ஒரு கப், முளைகட்டிய கொள்ளு - ஒரு கப், இஞ்சி - சிறு துண்டு, மிளகு - 2 டேபிள்ஸ்பூன், பச்சைமிளகாய் - இரண்டு, எலுமிச்சம்பழம் - 1, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
ஊற வைத்த புழுங்கல் அரிசியுடன் இஞ்சி, மிளகு, பச்சைமிளகாய் சேர்த்து அரைக்கவும். ஜவ்வரிசியை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு அரை மணி நேரம் ஊற விடவும். தண்ணீரை உறிஞ்சி பொல பொல வென்று ஆகிவிடும். பாசிப்பருப்பு, துவரம் பருப்பு, தனியாக ஊற விடவும். ஊறிய பருப்புவகைகளுடன், முளைகட்டிய கொள்ளு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். எல்லா மாவையும் ஒன்றாக கலந்து தேவையான உப்பு சேர்த்து, கல் காய்ந்ததும் மிதமான தீயில் அடை மாவை ஊற்றி இருபுறமும் எண்ணை விட்டு, எடுப்பதற்கு முன், குடமிளகாயைப் பொடியாக நறுக்கி, காரட் துருவலுடன் சேர்த்து கலந்து ஜவ்வரிசியுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து (புளிப்புக்கு தகுந்தாற்போல்) அடையின் மேல் தூவி ஒரு நிமிடம் வைத்து எடுக்கவும். கலர்ஃபுல் கலக்கல் அடை இது!
25. மாங்காய் இஞ்சி மாகாணி அடை
தேவையானவை:
புழுங்கல் அரிசி - ஒரு கப், மாங்காய் இஞ்சி - 4, மாகாணிக்கிழங்கு - 2, இஞ்சி - சிறு துண்டு, பூண்டு - 4 பல், காய்ந்த மிளகாய் - 2, முளைகட்டிய கொண்டைக்கடலை - ஒரு கப், பாசிப்பருப்பு - அரை கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
அரிசியையும், பாசிப்பருப்பையும் தனித் தனியே ஒரு மணி நேரம் ஊற விடவும். மாங்காய் இஞ்சியை தோல் சீவிக் கொள்ளவும். மாகாணிக்கிழங்கை தண்ணீரில் ஒரு மணி நேரம் போட்டு தோல் சீவி பொடியாக நறுக்கவும். ஊற வைத்த அரிசி, பருப்பு, கொண்டைக்கடலை, மாகாணித்துண்டுகள், இஞ்சி, மாங்காய் இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய் எல்லாவற்றையும் சேர்த்து கலந்து அடை பதத்துக்கு அரைத்து தேவையான உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். கல் காய்ந்ததும், மிதமான தீயில் அடை தட்டி இருபுறமும் எண்ணெய் விட்டு வெந்ததும் எடுக்கவும். எளிதில் ஜீரணமாகும் அடை இது.
26. நோன்பு அடை
தேவையானவை:
பச்சரிசி - ஒரு கப், காராமணி - 4 டேபிள்ஸ்பூன், இஞ்சி - சிறு துண்டு, பச்சைமிளகாய் -1, கடுகு - 1 டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு கப், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
பச்சரிசியை சிவக்க வறுத்து நைஸாக அரைத்து சலித்துக் கொள்ளவும். காராமணியை வறுத்து ஊற வைத்து குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும். பச்சைமிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ஒரு பங்கு மாவுக்கு ஒரு பங்கு தண்ணீர் என்ற அளவில், தண்ணீர் கொதிக்கும்போது மாவை சிறிது சிறிதாக தூவி தேவையான உப்பு சேர்த்து கெட்டியாகக் கிளறவும். பிறகு, கடுகுடன் இஞ்சி சேர்த்து வதக்கி மாவில் போட்டு தேங்காய் துருவல், பெருங்காயத்தூள், வெந்த காராமணியை மாவில் போட்டு நன்கு பிசைந்து சிறு அடைகளாக தட்டி, இட்லி தட்டில் எண்ணெய் தடவி குக்கரில் வைத்து பத்து நிமிடம் வேக விட்டு எடுக்கவும்.
27. பெசரட் அடை
தேவையானவை:
புழுங்கல் அரிசி - ஒரு கப், பச்சரிசி - கால் கப், பாசிப்பருப்பு - முக்கால் கப், இஞ்சி - ஒரு துண்டு, காய்ந்த மிளகாய் - 2, தேங்காய்த்துருவல் - ஒரு கப், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
புழுங்கல் அரிசி, பச்சரிசி, பாசிப்பருப்பை சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து இஞ்சி, காய்ந்த மிளகாய், தேங்காய்த்துருவல் சேர்த்து அடைமாவை விட சற்று நைஸாக அரைத்துக் கொள்ளவும். பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கலக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து இருபுறமும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும். பாசிப்பருப்பு மணத்துடன் பெசரட் அடை ருசியாக இருக்கும்.
28. முருங்கைக்கீரை அடை
தேவையானவை:
புழுங்கல் அரிசி - ஒரு கப், முருங்கைக்கீரை - அரை கப், மொச்சை - ஒரு கப், பாசிப்பருப்பு - அரை கப், இஞ்சி - சிறு துண்டு, பூண்டு - 4 பல், காய்ந்த மிளகாய் - இரண்டு, முருங்கைப் பிஞ்சு - 10 (இளஞ்சிவப்பு கலரில் மெல்லிய கொடி போல இருக்கும்), பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், நெய் - தேவையான அளவு.
செய்முறை:
அரிசியை ஊற வைத்துக் கொள்ளவும். மொச்சை, பாசிப்பருப்பையும் சேர்த்து ஊற விடவும். ஊற வைத்த அரிசி, பருப்புடன், இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து அடைமாவு பதத்துக்கு அரைக்கவும். முருங்கைக்கீரை, முருங்கைப் பிஞ்சை பொடியாக நறுக்கி, சிறிது நெய்யில் வதக்கி மாவுடன் சேர்க்கவும். வெங்காயத்தைப் போட்டு மாவை நன்றாகக் கலந்து தேவையான உப்பு சேர்த்து கல் காய்ந்ததும் மிதமான தீயில் அடை தட்டி, இருபுறமும் நெய் விட்டு வெந்ததும் எடுக்கவும். முருங்கைப் பூவிலும் இந்த அடை செய்யலாம்.
29. வெள்ளரிக்காய் அடை
தேவையானவை:
புழுங்கல் அரிசி - ஒரு கப், முளைக்கட்டிய பாசிப்பயறு, கொண்டக்கடலை - தலா அரை கப், வெள்ளரிக்காய் தோல்சீவி பொடியாக நறுக்கியது - முக்கால் கப், காய்ந்த மிளகாய் - 4, இஞ்சி - சிறு துண்டு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிது, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
புழுங்கல் அரிசியை ஊற வைத்து, அதில் பாசிப்பயறு, கொண்டைக்கடலை, காய்ந்த மிளகாய், இஞ்சி சேர்த்து அரைக்கவும். முக்கால் பங்கு அரைந்ததும், நறுக்கிய வெள்ளரிக்காயை மாவுடன் கலந்து உப்பு சேர்த்து அடைமாவு பதத்துக்கு அரைத்து நன்கு கலக்கவும். கறிவேப்பிலை சேர்த்து, கல் காய்ந்ததும், மிதமான தீயில் அடையை தட்டவும். இருபுறமும் எண்ணெய் விட்டு வெந்ததும் எடுக்கவும்.
30. கீரைக்கிழங்கு அடை
தேவையானவை:
புழுங்கல் அரிசி - ஒரு கப், பாசிப்பருப்பு, துவரம்பருப்பு - தலா அரை கப், சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 1, ஆல்வள்ளிக் கிழங்கு - 1, பெரிய நெல்லிக்காய் - 3, நறுக்கிய முருங்கைக்கீரை - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 4, இஞ்சி - சிறு துண்டு, பூண்டு - 4 பல், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
ஆல்வள்ளிக் கிழங்கையும் சர்க்கரைவள்ளிக் கிழங்கையும் வேக வைத்து தோல் உரித்துக் கொள்ளவும். பாசிப்பருப்பு, துவரம்பருப்பை ஊற வைக்கவும். நெல்லிக்காயை சீவி கொட்டையை நீக்கவும். அரிசியை ஊற வைத்து களைந்து தண்ணீரை வடித்து, ஊற வைத்த பருப்பு, நெல்லிக்காய், வேக வைத்த கிழங்கு, இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து கரகரப்பாக அடைமாவு பதத்தில் அரைத்துக் கொள்ளவும். முருங்கைக்கீரை, உப்பு சேர்த்து கலந்து, கல் காய்ந்ததும் அடை தட்டி எண்ணெய் விட்டு முறுகலாக வெந்ததும் எடுக்கவும். கீரை, கிழங்கு என மாறுபட்ட சுவையில் மணக்கும் இந்த அடை.
0 comments:
Post a Comment