Thursday, September 18, 2014
வெந்தயக் கீரை
வெந்தயக் கீரையின் சுந்தர ஜாலம்!
வெந்தயக் கீரையின் சுவையும் மணமும் உங்களுக்கு தெரியும். அழகையும் குளிர்ச்சியையும் அது அள்ளித் தரும் என்பது தெரியுமா?
தழையத் தழைய கூந்தலுடன் வளைய வரும் பெண்களை பார்க்கும் போது, பொறாமையாக இருக்கிறதா? கவலையை விடுங்கள். தலைமுடி யின் வளர்ச்சியைத் தூண்டும் அற்புத மருந்து வெந்தயக் கீரையில் இருக்கு!
2 கட்டு வெந்தயக் கீரை எடுத்து, காம்பை நீக்கிவிட்டு கெட்டியான விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள். இதை சீடைக்கு உருட்டுவதுபோல உருட்டி, 2 நாள் வெயிலில் காய வையுங்கள் (உருண்டை உடைந்தாலும் பரவாயில்லை). கால் கிலோ நல்லெண்ணெயைக் காய்ச்சி, மிதமான சூட்டில் இறக்கி அதில் இந்த உருண்டைகளைப் போடுங்கள். 10 நாட்கள் நன்றாக ஊறவிட்டு, வடிகட்டுங்கள்.
இந்த தைலத்தை தினமும் தலைக்குத் தேய்த்துக்கொள்ளுங்கள். உடம்பு உஷ்ணம் குறைந்து தலைமுடி நீண்டு வளரத்தொடங்கும்.
தோலை பளபளப்பாக்கவும் இந்தத் தைலம் உதவும். இதனுடன், 5 டீஸ்பூன் விளக்கெண்ணெய் கலந்து உச்சி முதல் பாதம் வரை சூடு பரக்க தேய்த்து, ஐந்து நிமிடம் கழித்து பயத்தமாவு போட்டுக் குளித்தால்... தோலின் வறட்சி நீங்கி, பளபளவென மின்னும். உடம்புக்கு அது குளுமையும் தரும்.
சிலருக்கு மூக்கின் மேல் சொரசொரப்பும், கரும் புள்ளிகளும் தோன்றி முக அழகைக் கெடுத்துவிடும். இதற்கும் தீர்வு இருக்கிறது வெந்தயக் கீரையில்.
சிறிது வெந்தயக் கீரையுடன் தயிர் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை மூக்கின் மேல் தடவி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள்.
தொடர்ந்து இப்படிச் செய்துவந் தால், புள்ளிகளும் சொரசொரப்பும் காணாமல் போய் மூக்குத்தி இல்லாமலே மூக்கு டாலடிக்கும்.
முகத்தில் கரும்புள்ளியும், அம்மை தழும்பும் மாறாத வடுக்களை ஏற்படுத்திவிடும். இந்த வடுக்களுக்கு ‘குட்பை’ சொல்ல வைக்கிறது வெந்தயக் கீரை.
வெந்தயக் கீரையை அரைத்து விழுதாக்கி, ஒரு துணியில் கட்டிவிடுங்கள். சாறு இறங்கிவிடும். இந்தச் சாறு ஒரு டீஸ்பூனுடன், 2 சொட்டு தேன் கலந்து முகத்தில் பூசி 5 நிமிடம் மசாஜ் செய்து, கழுவுங்கள்.
சில தடவை இப்படி செய்தாலே, இருந்த இடமே தெரியாமல் வடு மறைந்துவிடும்.
கண் இமைகளில் முடி உதிர்ந்தால் அழகான கண்களும் ‘டல்’லாக தெரியும். முடி கொட்டுவதை நிறுத்தி படபடக்கும் இமைகளைத் தருகிற ‘பளிச்‘ டிப்ஸ் இது.
வெந்தயக் கீரையை அரைத்து ஜூஸாக்குங்கள். இந்த ஜூஸில் பஞ்சைத் தோய்த்து இமைகளின் மேல் தடவுங்கள். 5 நிமிடங்கள் கழித்து ‘ஜில்’ தண்ணீரில் கழுவி விடுங்கள்.
முடி உதிர்வது நின்று கருகருவென இமை முடிகள் வளரத் துவங்கும். பொம்மையின் கண்கள் போன்ற அழகான கண்கள் கிடைக்கும்.
0 comments:
Post a Comment