Monday, September 22, 2014

// // Leave a Comment

30 வகை அடை

11. ஆல்வள்ளி அடை


தேவையானவை:

இட்லி புழுங்கல் அரிசி - முக்கால் கப், மிளகு - 10, இஞ்சி - ஒரு சிறு துண்டு, காய்ந்த மிளகாய் - இரண்டு, தக்காளி - 1, பெரிய ஆல்வள்ளிக் கிழங்கு - 1, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

புழுங்கல் அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து இஞ்சி, காய்ந்த மிளகாய், மிளகு, தக்காளி சேர்த்து அடைமாவு பதத்தில் அரைக்கவும். ஆல்வள்ளிக் கிழங்கை தோல்சீவி துருவி, அரைத்த மாவுடன் சேர்க்கவும். இதில் சிறிது உப்பு சேர்த்து கல் காய்ந்ததும், அடை மாவை ஊற்றி, இருபுறமும் எண்ணெய் விட்டு வெந்ததும் எடுக்கவும். வித்தியாசமான கலவையுடன் ஆரோக்கியத்துக்கும் ஏற்றது இந்த ஆல்வள்ளிக்கிழங்கு அடை.


12. உலர்பழ அடை


தேவையானவை:

புழுங்கல் அரிசி - ஒரு கப், அத்திப்பழம் - 4 துண்டுகள், பேரீச்சம்பழம், பாதாம்பருப்பு, பிஸ்தா, செர்ரிப்பழம், முந்திரிப்பருப்பு - தலா 10, காய்ந்த திராட்சை - 2 டேபிள்ஸ்பூன், அல்பக்கோடாப்பழம் - 6, நெய் - தேவையான அளவு.

செய்முறை:

புழுங்கல் அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும். தோல் நீக்கிய பாதாம்பருப்பை ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும். பிஸ்தா, முந்திரிபருப்பை தனியாக அரைக்கவும். அத்திப்பழம், பேரீச்சை, செர்ரிப்பழம், அல்பக்கோடா, திராட்சை எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து, மாவுடன் கலந்து, கல்லில் சிறு அடையாக தட்டி, இருபுறமும் நெய் விட்டு வெந்ததும் எடுக்கவும்.


13. அவல் அடை



தேவையானவை:

புழுங்கல் அரிசி - அரை கப், கெட்டி அவல் - ஒரு கப், பார்லி - கால் கப், இஞ்சி - ஒரு துண்டு, மிளகு - 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். அவலை தண்ணீர் ஊற்றி ஊற விடவும். அரிசியை அரைத்து சிறிது மசிந்ததும் ஊற வைத்த அவல், பார்லியுடன் சேர்த்து இஞ்சி, மிளகு, வெங்காயம் சேர்த்து அரைக்கவும். உப்பு சேர்த்து மாவை கலக்கவும். கல் காய்ந்ததும் மாவை ஊற்றி இருபுறமும் எண்ணைவிட்டு வெந்ததும் எடுக்கவும். அவலும் பார்லியும் உடலுக்கு மிகவும் நல்லது.


14. பேபிகார்ன் அடை


தேவையானவை:

கோதுமை ரவை - ஒரு கப், புழுங்கல் அரிசி - அரை கப், இஞ்சி - சிறு துண்டு, மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சைமிளகாய் - 1, பேபிகார்ன் - ஒரு பாக்கெட் (எண்ணிக்கையில் 20), சிவப்பு, மஞ்சள், பச்சை என மூன்று கலர் குடமிளகாய் - தலா 1, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

கோதுமை ரவையும் அரிசியும் சேர்த்து ஊற விடவும். இஞ்சி, மிளகு, பச்சைமிளகாய் சேர்த்து அடைமாவு பதத்தில் அரைக்கவும்.அரைத்தமாவில் குடமிளகாய்களைப் பொடியாக நறுக்கி சேர்க்கவும். பேபிகார்னை பொடியாக நறுக்கி மாவுடன் கலந்து தேவையான உப்பு சேர்த்து கலக்கவும். கல் காய்ந்ததும் மிதமான தீயில் அடை தட்டி, இருபுறமும் எண்ணெய் விட்டு வெந்ததும் எடுக்கவும். கம கம வாசனையுடனும், அபார ருசியுடன் இருக்கும் இந்த பேபிகார்ன் அடை.


15. காராமணி அடை


தேவையானவை:

இட்லி புழுங்கல் அரிசி - ஒரு கப், சிவப்பு காராமணி - அரை கப், இஞ்சி - சிறு துண்டு, காய்ந்த மிளகாய் - 2, கறுப்பு முழு உளுந்து - ஒரு கப், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். காராமணியையும், கறுப்பு முழுஉளுந்தையும் தனியாக ஊற விடவும். ஊற வைத்த அரிசியுடன் இஞ்சி, காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கவும். கறுப்பு உளுந்து, காராமணியை தனியாக அரைக்கவும். அரைத்த இரண்டு மாவையும் உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். கல் காய்ந்ததும் மிதமான தீயில் அடை தட்டி இருபுறமும் எண்ணெய் விட்டு வெந்ததும் எடுக்கவும். கரகர மொறுமொறு காராமணி அடை ரெடி!


16. பாசிப்பருப்பு வெங்காய அடை


தேவையானவை:

பாசிப்பருப்பு - ஒரு கப், பச்சரிசி - கால் கப், பச்சைமிளகாய் - 3 அல்லது 4, வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்), இஞ்சி - சிறு துண்டு, மல்லித்தழை - கால் கப், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

அரிசி, பாசிப்பருப்பை நன்றாகக் களைந்து 3 மணி நேரம் ஊற விடவும். இதனுடன் மற்ற எல்லாவற்றையும் சேர்த்து விழுதாக அரைக்கவும். தேவையான உப்பு சேர்த்து மாவைக் கலந்து கல் காய்ந்ததும் மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக எடுக்கவும். நிமிடம் வேக விடவும். ஆறியதும் நன்கு பிழிந்து வைத்துக் கொள்ளவும். ஊற வைத்த அரிசியுடன் வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கவும். பருப்பு வகைகளைத் தனியாக அரைக்கவும். எல்லா மாவையும் கலந்து வெந்த வாழைப்பூவை போட்டு, சிறிது உப்பு சேர்த்து கலக்கவும். கல் காய்ந்ததும் அடைக்கு ஊற்றி இருபுறமும் எண்ணெய் ஊற்றி வேகவிட்டு எடுக்கவும். வெங்காய வாசமும் வாழைப்பூவின் ருசியும் ஒன்ஸ்மோர் கேட்க வைக்கும்.


17. மசாலா அடை




தேவையானவை:

புழுங்கல் அரிசி - ஒரு கப், பட்டை - 1, லவங்கம் - 4, ஏலக்காய் - 4, சோம்பு, கசகசா - தலா 4 டீஸ்பூன், ரோஜா மொட்டு - சிறிதளவு, பூண்டு - 4 பல், இஞ்சி - சிறு துண்டு, மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன், பிரிஞ்சி இலை - 1, பாசிப்பருப்பு - அரை கப், காய்ந்த மிளகாய் - 4, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு,

செய்முறை:

அரிசியுடன் பாசிப்பருப்பை ஊற வைத்து, இஞ்சி, பூண்டு, மிளகு, காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கவும். மசாலா சாமான்களை வெறும் கடாயில் வறுத்து மிக்ஸியில் பொடித்து, அரைத்த மாவுடன் சேர்த்து அடை வார்க்கவும். வறுத்த மசாலா சாமான்களை அரிசியுடன் சேர்த்தும் அரைக்கலாம்.


18. பப்பாளி அடை



தேவையானவை:

புழுங்கல் அரிசி - ஒரு கப், முற்றிய பெரிய பப்பாளிக்காய் - 1, பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், பாசிப்பருப்பு - அரை கப், இஞ்சி - ஒரு துண்டு, சீரகம் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

அரிசியுடன் பாசிப்பருப்பையும் ஊற வைத்து, இஞ்சி சேர்த்து அரைக்கவும். பப்பாளிக்காயை தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அரைத்த மாவுடன் நறுக்கிய பப்பாளித்துண்டுகளைப் போட்டு வெங்காயம், சீரகம், பெருங்காயத்தூள், தேவையான உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். கல் காய்ந்ததும், மிதமான தீயில் அடை தட்டி, இருபுறமும் எண்ணெய் விட்டு வெந்ததும் எடுக்கவும்.


19. கோங்கூரா அடை


தேவையானவை:

புழுங்கல் அரிசி - ஒரு கப், பாசிப்பருப்பு - அரை கப், வெங்காயம் - 1, இஞ்சி - ஒரு துண்டு, மிளகு - 2 டீஸ்பூன், பூண்டு - 4 பல், கோங்கூரா கீரை - அரை கப், தேங்காய்த்துருவல் - ஒரு கப், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

அரிசியுடன் பாசிப்பருப்பையும் ஊற வைத்து இஞ்சி, மிளகு, பூண்டு, வெங்காயம், தேங்காய்த்துருவல், கோங்கூராகீரை எல்லாவற்றையும் சேர்த்து அரைக்கவும். தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து, கல் காய்ந்ததும், மிதமான தீயில் வைத்து அடை வார்த்து இருபுறமும் எண்ணெய் விட்டு வெந்ததும் எடுக்கவும். புளிப்பும் காரமும் வெங்காயத்தின் மணமும் சேர்ந்து சூப்பர் சுவையில் இருக்கும் கோங்கூரா அடை!


20. பரங்கி அடை


தேவையானவை:

புழுங்கல் அரிசி - ஒரு கப், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா கால் கப், உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன், பிஞ்சு பரங்கிக்காய் - 1 (பால் பிஞ்சு பந்து அளவில் இருக்கும்), இஞ்சி - சிறு துண்டு, பூண்டு - 4 பல், காய்ந்த மிளகாய் - 2, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

அரிசியையும் பருப்பு வகைகளையும் தனித்தனியே ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய அரிசியுடன், இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கவும். பருப்பை தனியாக அரைத்து இரண்டு மாவுகளையும் ஒன்றாக சேர்க்கவும். பரங்கிப்பிஞ்சை பொடியாக நறுக்கி மாவுடன் கலந்து தேவையான உப்பு சேர்க்கவும். கல் காய்ந்ததும், மிதமான தீயில் அடையைத் தட்டி இருபுறமும் எண்ணெய் விட்டு வெந்ததும் எடுக்கவும்.


30 வகை அடை-01 | 30 வகை அடை-02 | 30 வகை அடை-03

0 comments:

Post a Comment